“இந்து – முஸ்லிம் ஒற்றுமைச் சின்னமாக அயோத்தியில் மசூதி கட்டப்படும்!” – ஐஐசிஎப் நம்பிக்கை!!

அயோத்தியில் மசூதிக்காக முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட உள்ள புதிய மசூதியுடன் மருத்துவமனை, ஆய்வு மையம், நூலகம் உள்ளிட்டவை இந்து – முஸ்லிம் ஒற்றுமைச் சின்னமாக அமையும் என இந்தோ – இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை (ஐஐசிஎப்) நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக நீடித்த அயோத்தி நிலப் பிரச்சினை முடிவுக்கு வந்து ராமர் கோயிலுக்கான பணி தொடங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அளித்த தீர்ப்பின்படி, பாபர் மசூதிக்கு ஈடாக 5 ஏக்கர் நிலம் உத்திரபிரதேச சன்னி முஸ்லிம் மத்திய வக்ஃபுவாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலம், ராம ஜென்மபூமி வளாகத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனிப்பூர் கிராமத்தில் உள்ளது. இங்கு மசூதி கட்ட சன்னி முஸ்லிம் வாரியம் சார்பில் இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை (ஐஐசிஎப்) உருவாக்கப்பட்டது. இதன் சார்பில் அங்கு புதிய மசூதியுடன், உயர்தர சிகிச்சைக்கான மருத்துவமனை, ஆய்வு மையம், நூலகம், அருங்காட்சியகம், சமுதாய உணவுக்கூடம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
இதுகுறித்து ஐஐசிஎப் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அத்தர் உசைன் கூறும்போது, ‘அயோத்தி நிலப் பிரச்சினையால் நாடு முழுவதிலும் இந்து-முஸ்லிம் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருந்தது. தற்போது அதன் மீதான தீர்ப்பை இருதரப்பினரும் ஏற்றதால் இங்கு கோயிலும், மசூதியும் அமைகின்றன. பாபர் மசூதிக்கு ஈடாகக் கட்டப்படும் புதிய மசூதி உள்ளிட்டவை, நாட்டின் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் சின்னமாக அமையும்.’ என்றார்.
இந்த 5 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள கட்டிடங்களில் மசூதி மட்டுமே முஸ்லிம்களுக்கானதாக இருக்கும். மற்றவை அயோத்தி வரும் ராம பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஐசிஎப் சார்பில் புதிய வங்கிக் கணக்கும் தொடங்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் அளிக்கும் நன்கொடையில் அனைத்தும் அமைக்கப்பட உள்ளன. இதற்காக வெளிநாடுகளில் இருந்தும் நன் கொடை பெற ஐஐசிஎப் சார்பில் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த நன்கொடை அனைத்தும் முஸ்லிம்களின் ஷரீயத் சட்டங்களின்படி மட்டுமே வசூல் செய்யப்படும் என அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, சட்டவிரோதமாக சம்பாதித்த பணம், வங்கி வைப்புத் தொகைக்கான வட்டி, மது விற்பனையில் கிடைத்த லாபம் உள்ளிட்ட வருமானங்கள் நன்கொடையாக ஏற்கப்படாது. இது தொடர்பான விளக்க அறிக்கை ஐஐசிஎப் சார்பில் விரைவில் வெளியிடப்பட உள்ளது.