‘இ பாஸ் கொடுங்க…’ இ.பி.எஸ். வைத்த கோரிக்கை

‘கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், தங்கள் படகுகளை பழுது பார்க்க, கேரளா செல்ல வேண்டும்; அதற்கு, ‘இ-பாஸ்’ வழங்க வேண்டும்’ என, கேரள முதல்வருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: “கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு சொந்தமான, 350 விசைப்படகுகள், 750 பாரம்பரிய படகுகள், ஊரடங்கு காரணமாக, கேரள மாநில கடற்கரையில், வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கன்னியாகுமரி திரும்பி விட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், 25 ஆயிரம் மீனவ குடும்பங்கள், மூன்று மாதங்களாக, ஊரடங்கு காரணமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
தற்போது, மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து, மீன் பிடித்தலுக்கு தயார் செய்ய, கேரளா செல்ல விரும்புகின்றனர். அதற்கு, ‘இ-பாஸ்’ பெற்று தரும்படி, மீனவர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. மீனவர்கள் ஆகஸ்ட் 1 முதல், மீன்பிடிக்க செல்வதற்கு வசதியாக, அவர்கள் கேரளா வந்து, தங்கள் படகுகளை பழுது பார்க்க வேண்டும். எனவே, அவர்களுக்கு, ‘இ-பாஸ்’ வழங்க, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.