தகிகாவா நகரத்தில் பெருகிவரும் கரடிகள் தொல்லை; தடுக்க தயாரித்த ஓநாய் ரோபோக்கள்!!
ஜப்பான் நாட்டின் ஹொகாய்தோ தீவில் இருக்கிறது தகிகாவா நகரம். வனத்தை ஒட்டிய இந்த நகரில் கரடிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. ஊருக்குள் புகும் கரடிகள் மக்களையும் தாக்குகின்றன.
கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு தகிகாவாவில் கரடிகளின் தாக்குதல் மிகவும் அதிகரித்துவிட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் கரடி தாக்கி இருவர் உயிரிழந்துவிட்டனர். எனவே இதனை தடுப்பது குறித்து அரசு சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இறுதியில் கரடிகள் ஊருக்குள் புகுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக ராட்சச ஓநாய் ரோபோக்களை பயன்படுத்த அரசு முடிவு செய்தது. நான்கு கால்கள், கொடூரமான கண்கள், கூரிய பற்கள் என அச்சு அசல் ஓநாய் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், ஊருக்கு வெளியே எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளள.
ஓநாய் ரோபோக்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் கரடிகளை சரியாக அடையாளம் கண்டு ஒலி எழுப்பும். அதைக் கேட்டு பயந்து கரடிகள் ஊருக்குள் நுழையாமல் ஓடிவிடும் என ஜப்பான் அரசு நிர்வாகம் நம்புகிறது. மேலும் ஓநாய் ரோபோக்களின் சத்தம் கேட்டு உள்ளூர் மக்களும் சுதாரித்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரடிகளை விரட்ட அரசு எடுத்துள்ள இந்த முயற்சியால் தகிகாவா மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.