ஆலயங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் – இந்து சமய அறநிலையத்துறை வெளியீடு..

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஆலயங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலணிகளை கோயில் நுழை வாயில்களில் அவரவரே எடுத்து வைத்துச் செல்ல வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும். கைகளை கிருமிநாசினி கொண்டும், கால்களை தண்ணீர் கொண்டும் சுத்தம் செய்த பின்னரே கோயில்களுக்குள் செல்ல வேண்டும்.
கால அபிஷேகம், அர்ச்சனை, உபய கட்டண சேவைகள், விழாக்கள் உள்ளிட்டவற்றில் பங்கு கொள்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். தரிசனத்திற்குச் செல்லும் வழியில் போதுமான அளவு இடைவெளியில் குறியிடப்பட்ட இடத்தில் வரிசையாக நிற்க வேண்டும். வரிசையில் செல்லும் வழியில் உள்ள கைப்பிடிகள் உள்ளிட்ட எதையும் பக்தர்கள் தொடாமல் செல்ல வேண்டும். அர்ச்சகர்கள் பக்தர்களை தொட்டு குங்குமம், தீர்த்தம், விபூதி, பூ உள்ளிட்ட பிரசாதங்களை வழங்க அனுமதி இல்லை.
அருகில் வைக்கப்பட்டிருக்கும் தட்டில் இருந்து பிரசாதங்களை எடுத்துக் கொள்ளலாம். உண்டியலை தொடாமல் குறிப்பிட்ட இடைவெளியில் இருந்து காணிக்கைகளை செலுத்தலாம். கொடி மரம் உள்ளிட்ட ஏனைய இடங்களில் அமர்வது, விழுந்து வணங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பிரதான சன்னதிகளுக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.