“சூரப்பா நேர்மையானவராக இருந்தால் விசாரணை கமிஷனை எதிர்கொள்ள வேண்டும்!!” அமைச்சர் அன்பழகன் கருத்து!!

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா நேர்மையானவராக இருந்தால் விசாரணை கமிஷனை எதிர்கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல், முறைகேடான பணி நியமனங்கள் உள்ளிட்ட புகார்கள் எழுந்ததால், அவற்றை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனை நியமித்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. சூரப்பா மீதான விசாரணை அடுத்த வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். சூரப்பா பயப்படத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார். புகார்கள் வந்ததன் எதிரொலியாக, உண்மை நிலையை அறிவதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார். சூரப்பா நேர்மையானவராக இருந்தால் விசாரணை கமிஷனை எதிர்கொண்டு, தாம் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ‘விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையிலேயே சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவர் மீது புகார் எழுந்த உடன், அவரை சஸ்பெண்ட் செய்ய சொல்வதே ஸ்டாலினின் வேலையாய் போய் விட்டது. தானும் ஊரில் இருக்கிறேன் என்பதைக் காட்டுவதற்கே ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்’ என விமர்சனம் செய்துள்ளார்.