வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொதுப்பணித்துறை!

பூவிருந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மாநகரின் முதன்மையான நீராதாரமாக உள்ளது. தற்போது ஏரியில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர். சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது வேகமாக நிரம்பி வரும் நிலையில், நீர்மட்ட உயரம் 20.75 அடியாக உள்ளது. இதனால் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்படும் போது கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3642 கனஅடியாகும். 2781 கனஅடி நீர் இருப்பு உள்ளது. பருவமழை காரணமாகவும், கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாகவும் நீர் வரத்து அதிகரித்து செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் பொறியாளர் கண்ணையா தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர்ந்து மதகுகளின் உறுதி தன்மை, நீர் இருப்பு, மழையின் அளவு போன்ற ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் ஏரிக்கு செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்த நேரத்திலும் நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியில் தண்ணீர் 21 அடியை எட்டியதும் திறந்து விட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏரியில் 20.75 அடிக்கு தண்ணீர் உள்ளது. நீர்வரத்து 700 கனஅடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 22 அடியை எட்டும்போது தான் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும். நீர்வரத்து குறைவாக உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.