“நான் பைடன் அமைச்சரவையில் சேர்ந்தால், என் மனைவி என்னை விட்டு பிரிந்து விடுவார்” – ஒபாமா
![](https://thambattam.com/storage/2020/11/yq-bobama-09102024-763x470.jpg)
சமீபத்தில், நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் உலகையே தன் பக்கம் ஈர்த்தது. ட்ரம்ப், ஜோ பைடன் இருவரும் அதிபர் பதவிகளுக்குப் போட்டியிட்ட நிலையில் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றினர்.
அமெரிக்காவின் 44 -வது அதிபராக பராக் ஒபாமா இருந்த வரை, அவரது தலைமையின் கீழ் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை துணை அதிபராக இருந்தவர் ஜோ பைடன். இவர் அடுத்த ஆண்டு ஜனவரியில் 46 -வது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கும் நிலையில், ஜோ பைடன் அமைச்சரவையில் இடம் பெறுவது பற்றி பராக் ஒபாமாவிடம் ஜோ பைடனுக்கு அவர் எவ்வாறு உதவுவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஒபாமாவின் நிர்வாகத்தில் முக்கியமானவர்களாக அறியப்பட்ட , சூசன் ரைஸ் (Susan Rice )மற்றும் மிச்சல் ஃப்ளூர்னோய் (Michelle Flournoy) ஆகியோர் ஜோ பைடன் தலைமையின் கீழ் முக்கிய பதவிகளுக்கு பரிசீலிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில்., அத்தகைய அமைச்சரவை நிலைப்பாட்டைக் கருத்தில் கொள்வீர்களா என்று ஒபாமாவிடம் கேட்டதற்கு, “மிச்சல் என்னை விட்டு பிரிந்து செல்ல நேரிடும் என்பதால், நான் செய்யாத சில விஷயங்கள் உள்ளன” என்றார்.
மேலும், தொடர்ந்து பதிலளித்த பராக் ஒபாமா, “ஜோ பைடனுக்கு எனது ஆலோசனைகள் தேவைப்படாது, அமைச்சரவையில் அவர் எனக்கு ஓரிடம் அளிக்கிறார் என்றால், அதில் நான் இடம் பெறமாட்டேன். நான் பைடன் அமைச்சரவையில் சேர்ந்து விட்டால், என் மனைவி மிச்சல் என்னை விட்டு பிரிந்து சென்று விடுவார். ஆனால், என்னால் முடிந்த வகையில் பைடனுக்கு நான் உதவுவேன்” என்றார்.