“செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை” பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதி!!

செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்ததால், 2015-ஆம் ஆண்டைப் போல செம்பரம்பாக்கம் அணை நிரம்பி, திறக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப் பணித் துறை அதிகாரிகள் இன்று காலை நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொதுப் பணித் துறையின் தலைமை பொறியாளர் அசோகன், “2015-ஆம் ஆண்டு பெய்ததைப் போல சென்னையில் தற்போது கனமழை பெய்யவில்லை. மழை பெய்து கொண்டிருந்த போது செம்பரம்பாக்கம் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது மழை குறைந்ததால், நீர்வரத்தும் குறைந்துவிட்டது.

செம்பரம்பாக்கத்துக்கு தற்போது 450 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி தற்போதைக்கு திறக்கப்படாது. அதே வேளையில், ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு பிறகுதான் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “செம்பரம்பாக்கம் ஏரி குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நீர் முழுக் கொள்ளளவை எட்டும் பட்சத்தில் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை தயார் நிலையில் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் உள்ளது.

அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077) TNSMART செயலி, சமூக வலைதளம் மற்றும் பத்திரிக்கை ஊடகத்துறை மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனவும் அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x