இணைய செஸ் ஒலிம்பியாட்:இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி….

இணைய செஸ் ஒலிம்பியாட் போட்டியின் காலிறுதிச் சுற்றில் சர்ச்சைக்குரிய விதத்தில் ஆர்மீனிய அணி போட்டியிலிருந்து வெளியேறியதால் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
முதல் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நிஹல் சரினும் ஆர்மீனியாவின் ஹைக் மார்திரோசியானும் மோதினார்கள். ஆட்டத்தில் நடுவில் மார்திரோசியானின் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஆட்ட விதிமுறைகளின்படி நிஹல் சரின் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஆர்மீனியா அணி கடுமையாக எதிர்த்தது.

மார்திரோசியானின் இணைய இணைப்பு துண்டிக்கப்படவில்லை. செஸ்.காம்-ன் சர்வரில் தான் பிரச்னை என அவர்கள் தரப்பிலிருந்து வாதிடப்பட்டது. ஆனால் போட்டி நிர்வாகம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு எதிப்பு தெரிவிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய விதத்தில் ஆர்மீனிய அணி போட்டியிலிருந்து வெளியேறியது. இதனால் இந்திய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. ஆர்மீனிய அணி மீது நடவடிக்கை எடுக்கப்படாது என போட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரையிறுதிச் சுற்றில் போலந்தை இந்திய அணி எதிர்கொள்கிறது.