அறிமுகமானவர்களாலேயே 98 சதவிகித பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது; தில்லி காவல்துறை

நாட்டின் தலைநகரான தில்லியில் உறவினர் அல்லது ஏற்கெனவே அறிமுகமானவர்களாலேயே 98 சதவிகித பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா தலைமையில் உள்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தில்லி காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையிலான உறவு குறித்து காவல்துறை சார்பில் விளக்கவுரை அளிக்கப்பட்டது.
அதில் தில்லியில் 44 சதவிகித பாலியல் வன்கொடுமைகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினராலேயே அல்லது குடும்ப நண்பர்களாலேயே நடந்துள்ளது. 13 சதவிகித பாலியல் வன்கொடுமைகள் உறவினர்களாலும், 12 சதவிகித பாலியல் வன்கொடுமைகள் அண்டை வீட்டினரால் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், 26 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவதொருவகையில் அறிமுகமானவர்களாகவே இருக்கின்றனர். 3 சதவிகிதத்தினர் முதலாளி மற்றும் உடன் பணிபுரியும் நபர்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 2 சதவிகிதத்தினர் மட்டுமே அறிமுகமற்ற நபர்களால் வன்கொடுமைக்கு ஆளாப்படுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.
கூட்டத்தின் போது, பாலின உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல், வன்கொடுமைகளைத் தடுக்க விழிப்புணர்வு பிரசாரங்களைத் தொடங்குவது போன்ற பல நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்பட்டது.