நீண்ட இழுபறிக்கு பின் ராஜஸ்தான் சட்டப்பேரவை கூடுவதற்கான தேதி அறிவிப்பு!

ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பமாக நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சட்டப்பேரவையை கூட்டுவதற்கான தேதியை அறிவித்தார்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் தன்னை கெலாட் ஒரங்கட்டுவதாக கூறி துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேருடன் தனி அணி அமைத்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால் அவரிடமிருந்து துணை முதல்வர் பதவியையும், காங்கிரஸ் மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.
இருப்பினும் அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் ஆட்சி கவிழும் சூழல் உண்டானது. இதனால் கொறடா உத்தரவை மீறியதாக கூறி அவர்கள் எம்.எல்.ஏ பதவியை பறிக்கும் முயற்சியில் காங்., இறங்கியது. அதற்கு உயர் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற்றார் சச்சின் பைலட்.

ராஜஸ்தானில் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 200. பெரும்பான்மையை நிரூபிக்க 101 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சச்சின் பைலட் உடன் 17 எம்.எல்.ஏக்கள் இருக்கின்ற போதும், சுயேட்சைகள், பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சி எம்.எல்.ஏக்களை தன் வளைத்து காங்., மேஜிக் நம்பரை பெற்றுவிட்டது. ஆனால் அவர்கள் எப்போது மனது மாறுவார்கள், பா.ஜ.க பக்கம் சாய்வார்கள் என்பதை சொல்ல முடியாது.
இதனால் அசோக் கெலாட் ஆளுநரிடம் உடனடியாக சட்டப்பேரவையை கூட்டுங்கள், நான் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன் என்றார். மோடி அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரோ காலம் தாழ்த்தி வந்தார். பொறுத்துப் பார்த்த அசோக் கெலாட் அதிரடியாக கடந்த வாரம் எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு கவர்னர் மாளிகை முன் தர்ணாவில் ஈடுபட்டார். ராகுல் காந்தி ஜனநாயக படுகொலை நடக்கிறது அனைவரும் குரல் கொடுங்கள் என வீடியோ வெளியிட்டு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சட்டப்பேரவையை கூட்ட அனுமதி தந்த ஆளுநர், உறுப்பினர்களுக்கு 21 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து இன்று சபாநாயகர் சிபி ஜோஷ் ஆளுநரை புதனன்று சந்தித்தார். இந்த சந்திப்பு நடைபெற்ற சில மணி நேரங்களில் அதிரடி திருப்பமாக ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட அனுமதி வழங்கப்படுகிறது என கல்ராஜ் மிஸ்ரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் அசோக் கெலாட் தரப்பு நிம்மதியடைந்துள்ளது.