பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட சில நாள்களில் 83 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்களுக்கு கரோனா!!

ஹரியாணாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட சில நாள்களில் 83 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து, மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஹரியாணா மாநிலத்தில் சமீபத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜிந் பகுதியில் உள்ள ஒன்பது பள்ளிகளில் உள்ள 11 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்களுக்கும், அதேபோன்று ரேவாரியில் உள்ள 12 அரசுப் பள்ளிகளில் 72 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், பள்ளிகள் உள்ளிட்ட கல்லூரி நிறுவனங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், கரோனா உறுதி செய்யப்பட்ட பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக ஹரியாணா கல்வி அமைச்சர் கன்வர் பால் குஜ்ஜார் தெரிவித்தார். அனைத்து பள்ளிகளும் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பராமரிப்பது போன்ற நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹரியாணாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,562 பேர் உள்பட மொத்தமாக 2,07,039 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,85,403 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,093 ஆக உள்ளது.