ஆட்கள் இருக்கும் போதே வீட்டினுள் நடந்த 40 சவரன் நகை கொள்ளை!!
![](https://thambattam.com/storage/2020/10/theft_house.jpg)
நாமக்கல்லில் வீட்டிற்குள் ஆட்கள் இருக்கும் போதே பீரோவை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் முல்லை நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன். கோழிகளுக்கான மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், நேற்றிரவு மனைவி மற்றும் மகன்களுடன் வீட்டின் முதல் தளத்தில் உறங்கியுள்ளார். இன்று காலை எழுந்தபிறகு, தரைத் தளத்தில் உள்ள அறையின் கதவு மற்றும் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பீரோவில் இருந்த சுமார் 40 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார், நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து தங்க நகைகள் கொள்ளை போனது குறித்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டிற்குள் ஆட்கள் இருக்கும் போதே தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் பேசு பொருளாகியுள்ளது.