டீசல், பெட்ரோல் கார்களுக்கு எதிராக இங்கிலாந்து பிரதமர் எடுத்த அதிரடி முடிவு!!
இங்கிலாந்தில் 2030-க்குப் பிறகு டீசல், பெட்ரோல் கார்கள் விற்பனை செய்யப்படாது என்று அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுபாடுகளும் அதன்மூலம் ஏற்பட்டு காலநிலை மாற்றங்களும் இன்றைய உலகின் மிகப்பெரும் கவலை. இதனைத் தடுக்க உலக நாடுகள் ஒரே குரலில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு விதமான மாசுக்களைத் தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழலைக் காக்க இங்கிலாந்து அரசு மிகப்பெரிய நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.
2030-க்குப் பிறகு டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் பிரிட்டனில் விற்பனை செய்யப்படாது என்பதே அந்த மிகப்பெரிய நடவடிக்கை. எதிர்கால உலகின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தத் துணிச்சலான நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. முதலில் 2040-ல் இருந்து இந்தத் திட்டத்தை அமல்படுத்த இங்கிலாந்து அரசு தீர்மானித்து இருந்தது. ஆனால், இப்போது பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சனின் 10 அம்ச திட்டத்தின் கீழ், 2030-ம் ஆண்டிலேயே செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இங்கிலாந்து சாலைகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான கார்கள் மின்சார கார்களாக இருக்கின்றன. இதை 100 சதவீதம் ஆக்கும் முயற்சியாகவே டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் தயாரிப்பு நிறுத்தப்பட இருக்கிறது. இதற்காக, பெரிய தொகையை மின்சார கார் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சனின் பசுமைத் தொழில்துறை புரட்சிக்கான திட்டத்தின்கீழ் இதற்கான வேலைகள் இப்போது இருந்தே தொடங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியிருக்கிறார் போரிஸ் ஜான்சன்.