காஷ்மீரில் உயிரிழந்த கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர்!! மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

காஷ்மீர் லடாக் பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்த தகவலை அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி ராணுவத்தில் நாயக் பொறுப்பில் பணியாற்றி வந்தார். இவருக்கு தமயந்தி என்ற மனைவியும் இரண்டு மகள் உள்ளிட்ட மூன்று குழந்தைகள் உள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பணியிலிருந்த போது, நேரிட்ட வாகன விபத்தில் கருப்பசாமி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையறிந்த கருப்பசாமியின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடலை சொந்த ஊரான கோவில்பட்டிக்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராணுவச் சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட கோவில்பட்டியைச் சேர்ந்த வீரர் கருப்பசாமி, லடாக் பகுதியில் விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.
நம்மைக் காக்கும் பணியில் தன்னை இழந்த கருப்பசாமி அவர்களுக்கு வீரவணக்கம்.
தியாக வீரரைத் தந்த குடும்பத்தாருக்கு என் ஆறுதல்! pic.twitter.com/ylAYtVKbXw
— M.K.Stalin (@mkstalin) November 19, 2020
மேலும் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தன்னுயிரை நினைக்காமல் நம் உயிரைக் காக்கும் ராணுவ சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட தமிழகத்தின் கோவில்பட்டியைச் சேர்ந்த வீரர் கருப்பசாமி அவர்கள் ஜம்மு-காஷ்மீர் லடாக் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
ராணுவப் பணியில் வீரர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்பவை. நம்மைக் காக்கும் பணியில் தன்னை இழந்த கருப்பசாமி அவர்களுக்கு வீரவணக்கம். தியாக வீரரைத் தந்த அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.