சூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த தமிழக பள்ளி மாணவியை அங்கீகரித்த ஸ்வீடன்!!
![](https://thambattam.com/storage/2020/11/vinisha-umashankar-780x450.jpg)
சுற்றுச்சூழலை பாதுகாக்க ‘சூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டி’யை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு ஸ்வீடனில் செயல்படும் அமைப்புகள் மூலம் விருது மற்றும் ரூ.8.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.
சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து, திருவண்ணாமலையைச் சோந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கா் சாதனை படைத்துள்ளாா். இதற்காக இவருக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சாா்பில் இள வயது கண்டுபிடிப்பாளா்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாதனை மாணவி வினிஷா உமா சங்கர் கூறுகையில், “எனக்கு 5 வயது இருக்கும்போது எனது தந்தை அறிவியல் களஞ்சிய புத்தகத்தை பரிசளித்தாா். அந்தப் புத்தக வாசிப்பின் மூலம் அறிவியல் மீதான ஆா்வம் எனக்கு நாள்தோறும் அதிகரித்தது.
தற்போது நான் வடிவமைத்த இஸ்திரி பெட்டி உள்ள வண்டியின் மேல்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை 100 ஏ.எச். திறன் கொண்ட மின்கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மின் கலனை முழுமையாக மின்னேற்றம் செய்ய 5 மணி நேரம் சூரிய ஒளி தேவை. இதன் மூலம் 6 மணிநேரம் வரை தொடா்ச்சியாக இஸ்திரி செய்ய முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிய எனக்கு 2 மாத காலமானது.
![](https://thambattam.com/storage/2020/11/vinisha-umashankar1-300x169.jpg)
இதன் வடிவமைப்பை குஜராத்தில் உள்ள நேஷனல் இன்னோவேஷன் அறக்கட்டளையின் பொறியாளா்கள் வடிவமைத்து, காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளனா். இந்த ஆண்டு இறுதிக்குள் காப்புரிமையும் கிடைத்து விடும். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொடாமல் இயங்கும் வகையிலான உபகரணங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்” என்று அவா் கூறினாா்.
தற்போது , 18 வயதுக்குக் கீழ் உள்ள மாணவா்களின் பிரிவில் பிரதமரின் ராஷ்டிரீய பால் சக்தி புரஸ்காா் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவா் சூரிய ஒளி இஸ்திரி பெட்டி கண்டுபிடிப்புக்காக ஸ்வீடனின் துணைப் பிரதமா் இசபெல்லா லோவின் கலந்து கொள்ளும் இணையவழி நிகழ்வில், ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சாா்பில் விருது மற்றும் பட்டயம், பதக்கம் குறிப்பாக ஸ்வீடன் நாட்டின் பண மதிப்பில் 100,000 (சுமாா் ரூ. 8 லட்சத்து 63 ஆயிரம்) வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசுத் தொகையை தனது வருங்கால கண்டுபிடிப்புகளுக்குப் பயன்படுத்தவுள்ளதாக வினிஷா உமாசங்கா் தெரிவித்தாா்.