தென்கொரியாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகள்!! கட்டுப்பாடுகள் அதிகரிப்பு..
![](https://thambattam.com/storage/2020/11/202005030700548166_Coronavirus-virus-in-South-Korea-to-infect-people_SECVPF-780x470.jpg)
தென்கொரியாவில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 271 பேருக்குக் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,004 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 509 பேர் பலியாகி உள்ளனர். சியோலில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாகவும், வீட்டிலிருந்தே பணிபுரிய மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் தென்கொரியாவில் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது.
இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியாவில் அதற்கு முன்னரே தொடங்கியது. உலகம் முழுவதும் சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.