உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பாகிஸ்தானின் லாகூர் மீண்டும் முதலிடம்!!
உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பாகிஸ்தானின் லாகூர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐ.க்யூ ஏர் எனப்படும் நிறுவனமானது காற்று தரக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, உலகம் முழுதும் காற்று மாசுபாடுள்ள நகரங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
காற்று தரக் குறியீட்டு எண்ணானது 50–க்கும் குறைவாக இருந்தால் அதனை திருப்திகரமான அளவாக கணிக்கிறது.அந்த அடிப்படையில் திங்களன்று பாகிஸ்தானின் லாகூர் நகரானது காற்று தரக் குறியீட்டு எண் 306-ஆக பதிவாகி, உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
அதன்படி இந்த அளவானது ‘மிக ஆபத்தானது’ என்று வகைபடுத்தப்படுகிறது. ஏற்கனவே கரோனா தொற்றினை எதிர்கொள்வதில் திணறிவரும் போது பாகிஸ்தான் சுகாதாரத் துறைக்கு இது பெரும் சிக்கலாகக் கணிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் மற்றொரு நகரான கராச்சி காற்று தரக் குறியீட்டு எண் 168-உடன் பட்டியலில் ஏழாவது இடத்தினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.