“உலக வர்த்தக ஒப்பந்த விதிகளுக்கு எதிராக சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது” சீனா குற்றச்சாட்டு!!
“சீன செயலிகளைத் தடை செய்யும் இந்தியாவின் முடிவானது உலக வர்த்தக ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது” என சீனா குற்றம்சாட்டி உள்ளது.
தேசத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும், நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறி சீனாவின் 43 செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று (நவ.24) தடை விதித்தது.
இந்திய இணையவழி குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அளித்த தகவலின் பேரில் இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. தடை செய்யப்பட்ட செயலிகள் அனைத்தும் சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை அல்லது சீனாவுடன் ஏதாவது ஒருவகையில் தொடா்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் அலிஎக்ஸ்பிரஸ், அலிபே கேஷியா், கேம்காா்டு, வீடேட் ஆகியவை தடை செய்யப்பட்ட செயலிகளில் முக்கியமானவை.
இந்நிலையில் “சீனப் பின்னணி கொண்ட செல்போன் செயலிகளைத் தடை செய்வதற்கு தேசிய பாதுகாப்பைச் சுட்டிக்காட்டுவதை நாங்கள் எதிர்க்கிறோம்” என சீன தூதரக செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அரசின் இந்த நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, கடந்த ஜூன் 29-ஆம் தேதி டிக்-டாக், யூசி பிரௌசா் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதைத் தொடா்ந்து செப்டம்பா் 2-ஆம் தேதி பப்ஜி, வீசாட் உள்ளிட்ட 118 செயலிகள் தடை செய்யப்பட்டன என்பது நினைவுகூரத்தக்கது.
இந்திய அரசால் இதுவரை சீனப் பின்னணி கொண்ட 267 செல்போன் செயலிகள் தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.