“அமைதியாக போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது நீர்பீரங்கிகளை பயன்படுத்தியது முற்றிலும் தவறு!!” கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!!
“மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது நீர்பீரங்கிகளை பயன்படுத்தியது முற்றிலும் தவறானது” என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் இயற்றிய புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மூன்று வேளாண் சட்டங்களுக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று (நவம்பர் 26) தேசிய தலைநகரை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக ‘டெல்லி சலோ’ பேரணிக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். இப்போராட்டம் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஹரியாணா அரசாங்கம் வியாழக்கிழமை பஞ்சாபுடனான தனது எல்லைகளை முழுமையாக சீல் வைத்தது. டெல்லியுடனான மாநில எல்லைகளிலும் போலீஸார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று, ‘டெல்லி சலோ’ பேரணியில் பஞ்சாப் விவசாயிகள் டிராக்டர் வாகனங்களில் வந்து திரளாகக் கலந்துகொண்டனர். ஹரியாணாவின் ஷாம்பு எல்லைப் பகுதிக்கு வந்தபோது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். போலீஸ் தடுப்புகளை காகர் ஆற்றில் வீசினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஷாம்பு மாநில எல்லையில் நிலைமை பதட்டம் ஏற்பட்டது. போராட்டக்காரர்களில் சிலர் கறுப்புக் கொடிகளை அசைப்பதும் காணப்பட்டது.
அப்போது, விவசாயிகளை கலைக்கவும், டெல்லிக்குச் செல்வதைத் தடுக்கவும் குறைந்தது இரண்டு முறை நீர் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. போராட்டக்காரர்கள் மீது தடியடிப் பிரயோகமும் நடத்தப்பட்டது.
केंद्र सरकार के तीनों खेती बिल किसान विरोधी हैं। ये बिल वापिस लेने की बजाय किसानों को शांतिपूर्ण प्रदर्शन करने से रोका जा रहा है, उन पर वॉटर कैनन चलाई जा रही हैं। किसानों पर ये जुर्म बिलकुल ग़लत है। शांतिपूर्ण प्रदर्शन उनका संवैधानिक अधिकार है।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 26, 2020
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் மூன்று விவசாய மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. அவற்றை திரும்பப் பெறுவதற்கு பதிலாக, அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் விவசாயிகளை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது நீர் பீரங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது முற்றிலும் தவறானது. அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது அவர்களின் அரசியலமைப்பு உரிமை.” இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.