இந்த ஆண்டு இறுதி வரை இந்தியா முழுவதும் சர்வதேச விமான போக்குவரத்து சேவை ரத்து!!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மெல்ல குறைந்து வரும் நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த நவம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் ஒரு ஆண்டு ஆன பிறகும் தொடர்ந்து பரவி வருகிறது. பல நாடுகள் கொரோனா இரண்டாம் அலையை சந்தித்து வரும் நிலையில் இந்தியா கொரோனா பொதுமுடக்கம் மூலமாக கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறது.
தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கியுள்ளதால் இந்தியாவிலிருந்து சர்வதேச விமான சேவைகள் ரத்து அறிவிப்பை டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேசமயம் பயணிகள் விமானத்திற்கு மட்டுமே இந்த ரத்து என்றும், சரக்கு விமானங்களுக்கு வழக்கம்போல அனுமதி உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது.