“ஈரான் – அமெரிக்கா இடையேயான உறவைச் சரிசெய்வது ஜோ பைடனுக்கு எளிதானது”- ஈரான் அதிபர்
ஈரானுடனான அமெரிக்காவின் உறவைச் சரிசெய்வது ஜோ பைடனுக்கு எளிதானது என்று ஈரான் அதிபர் ருகானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் கூறும்போது, ”ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பிரச்சினையைத் தீர்ப்பது ஜோ பைடனுக்கு எளிதானது. ஆனால், இப்பிரச்சினையைத் தீர்க்க நேரம் எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் ஈரானுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்துள்ளார். ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகிய பின்பு, அந்நாட்டின் மீது தொடர்ச்சியாக பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் விதித்து வந்தார்.
மேலும், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம் சுலைமானை அமெரிக்கப் படைகளை வைத்து ட்ரம்ப் கொன்றார். இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்துள்ளது.
முன்னதாக, சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் எந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் தங்கள் நிலைப்பாடு ஒரே மாதிரியாக இருக்கும் என்று தெரிவித்தது. தற்போது, ஈரானுடனான அமெரிக்காவின் உறவைச் சரிசெய்வது ஜோ பைடனுக்கு எளிதானது என்று தெரிவித்துள்ளார்.