நாகாலாந்து மலைப்பகுதிகளில் வைரம்… விசாரணை மேற்கொள்ள அரசு உத்தரவு!!

நாகாலாந்து மலைப்பகுதியில் வைரம் கிடைப்பதாக சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, விசாரணை மேற்கொள்ள புவியியலாளர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் விலைமதிப்பற்ற தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பல்வேறு சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. வச்சிங் வட்டத்தைச் சேர்ந்த வாஞ்சிங் கிராமத்தில் அதன் மலைப்பகுதிகளில் விலைமதிப்பற்ற வைரக் கற்கள் கிடைத்துள்ளதாக அத்தகவல்களில் கூறப்பட்டன.
மேலும், கிராம மக்கள் வைரங்களைத் தேடி நிலங்கள் தோண்டுவதைக் காட்டும் வீடியோ கிளிப்புகள், செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டதாக காட்டப்பட்ட சிறிய துண்டுகளாக மிளிரும் படிகக் கற்களின் படங்கள் ஊடகங்களில் வெளியாகின.
Villagers digging for diamonds. The place is believed to to at #Wangching village in Nagaland. pic.twitter.com/smQwTBCh99
— Naorem Mohen (@laimacha) November 26, 2020
இச்செய்தி வேகமாகப் பரவியதன் மூலம் நாகலாந்தில் பரபரப்பு ஏற்பட்டது. மாநில அரசின் உயரதிகாரிகளுக்கும் இச்செய்தி எட்டியது. புவியியலாளர்கள் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நாகாலாந்தின் புவியியல் மற்றும் சுரங்க இயக்குநர் எஸ்.மானென் வெளியிட்டுள்ள உத்தரவில், ”மோன் மாவட்டத்தின் வச்சிங் பகுதியில் விலைமதிப்பற்ற தாதுக்கள் கண்டெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய முதற்கட்டமாக குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவுகள் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பின்னர் புவியியலாளர்களான அபெந்துங் லோதா, லாங்க்ரிகாபா, கென்யெலோ ரெங்மா மற்றும் டேவிட் லூபெனி ஆகியோர் வாஞ்சிங் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.” இவ்வாறு புவியியல் மற்றும் சுரங்க இயக்குநர் தெரிவித்துள்ளார்.