ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதை பெற்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!

நாட்டிலேயே முதல் முறையாக கேல்ரத்னா விருது உள்ளிட்ட விளையாட்டு விருதுகளை வீரர்கள் காணொலி மூலம் பெற்றனர்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் நிர்வாகிகள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய விளையாட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மிக உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக மாற்றுத் திறனாளி வீரர் மாரியப்பன், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஆகிய 5 பேரும், அர்ஜூனா விருதுக்கு இஷாந்த் ஷர்மா (கிரிக்கெட்), அதானு தாஸ் (வில்வித்தை), டுட்டீ சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி (பேட்மிண்டன்) உள்பட 27 பேரும், துரோணாச்சார்யா விருதுக்கு 13 பேரும், தயான்சந்த் விருதுக்கு 15 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு பெங்களூரிலுள்ள விளையாட்டு மையத்திலிருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதை பெற்றார். விருது பெறுபவர்கள் இந்திய விளையாட்டு ஆணையத்தால் (சாய்) டெல்லி, புனே, சண்டிகார், பெங்களூரு உள்பட 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் உள்ள வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலமாக விழாவில் இணைந்தனர்.
கிரிக்கெட் வீரர்க்ள் ரோஹித் சர்மா (கேல் ரத்னா), இஷாந்த் சர்மா (அர்ஜுனா) ஆகியோர் ஐபிஎல் தொடருக்குச் சென்றுள்ளதால் விருது நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மல்யுத்த நட்சத்திரவ் ஈரர் வினேஷ் போகட் (கேல்ரத்னா) பேட்மிண்டன் வீரர் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி (அர்ஜுனா) ஆகியோர் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.