இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியில் “அதானிக்கு கடன் வழங்காதீர்கள்” என்ற பதாகையுடன் மைதானத்திற்குள் இறங்கிய நபரால் பரபரப்பு..!
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டிக்கிடையில் “அதானிக்கு கடன் வழங்காதீர்கள்” என்ற பதாகையுடன் மைதானத்தில் இறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய – ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து சிறப்பாக விளையாடிய ஆரோன் பின்ச் மற்றும் ஸ்மித் ஆகியோர் சதமடித்தனர். வார்னர் அரை சதமடித்தார். மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்களை விளாசினார். இதனால் 50 ஓவர் முடிவில் 374 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
WATCH: Video of two #StopAdani supporters taking the grounds to protest @TheOfficialSBI's plans to give @AdaniOnline a $1bn (5000 crore) Indian taxpayer loan for Adani's Carmichael coal project #AUSvIND pic.twitter.com/NhY3vPN0HM
— Stop Adani (@stopadani) November 27, 2020
இந்தப் போட்டியின் 6 ஆவது ஓவரின்போது பார்வையாளர்கள் இருவர் பாதுகாப்பையும் மீறி மைதானத்துக்குள் “எஸ்.பி.ஐ வங்கி அதானிக்கு கடன் வழங்க வேண்டாம்” என்ற பதாகையுடன் நுழைந்தார்கள். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்துக்குள் நுழைந்தவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.