அமெரிக்காவில் புதிய கட்டுப்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடும் ஜோ பைடன்!!
மேலை நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிபர் தேர்தலை அடுத்து புதிதாக உருவாக உள்ள ஜோ பைடன் அரசு பல கட்டுப்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் அதன் தாக்கம் தற்போது குறைந்து உள்ளது. ஆனால் கொரோனாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை குறித்த பயம் அனைத்து நாடுகளிடமும் உள்ளது. கொரோனாவால் மிகமோசமாகத் தாக்கப்பட்ட அமெரிக்காவில் இரண்டாம் அலையை எதிர்கொள்ள அத்தியாவசிய தேவை அங்காடிகள் தவிர்த்து பார்கள் உள்ளிட்ட சொகுசு அங்காடிகள் மூட வலியுறுத்தப்படுகின்றன.
பிக் ஆப்பிள் என்ற அமெரிக்காவின் முக்கிய நகரத்தில் பார்கள் மிகப்பிரபலம். இங்கு இரவு நெடுநேரம் பார்கள் திறந்திருக்கும். இதனால் அங்கு வார இறுதியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இங்கு பார்கள் இரவு பத்து மணியோடு மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஆரம்பகட்ட கட்டுப்பாடுகளைத் தவிர முந்தைய டிரம்ப் அரசு இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்த திட்டமிடவில்லை. இதற்கு முக்கியக் காரணம் பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் மீது டிரம்ப் வைத்திருந்த அதீத நம்பிக்கைதான். இந்த தடுப்பு மருந்து விற்பனைக்கு வந்தால் இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லை என அவர் நினைத்தார்.
ஆனால் தற்போதைய ஜோ பைடன் அரசு முன்னெச்சரிக்கையாக இரண்டாம் அலை வருவதற்கு முன்னரே ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வரும் டிசம்பர் மாதம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.