இன்று நிகழும் 2020ன் கடைசி சந்திர கிரகணம்!!
நடப்பாண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று(நவ.,30) நிகழ உள்ளதாக மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு ஜன., 10, ஜூன் 5, ஜூலை, 4 ஆகிய தேதிகளில் மூன்று சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன. இந்தாண்டு மொத்த அல்லது பாதி சந்திர கிரகணங்கள் எதுவும் நிகழவில்லை. சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும் போது, சூரிய ஒளியை நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது.
கோவை மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் கூறுகையில், “பூமி, சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் வந்து சந்திரன் பூமி நிழலின் மங்கலான, வெளிப்புற பகுதி வழியாக நகர்வதால், இது புற நிழல் சந்திர கிரகணம் (பெனும்பிரல்) சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு இன்று மதியம், 1.04 மணிக்கு துவங்கி, மாலை 05.22 மணிக்கு நிறைவடையும். மாலை 3.13 மணியளவில் சந்திர கிரகணம் உச்சத்தில் இருக்கும்.
இந்த கிரகணம் அடிவானத்துக்கு கீழே இருப்பதால் நம் நாட்டில் தெரிய வாய்ப்பு மிகவும் குறைவு. முந்தைய சந்திர கிரகணத்தை காட்டிலும் இந்த கிரகணம், 2.45 மணி நேரம் நீண்டு காணக்கூடியதாக இருக்கும்” என்றார்.
ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ள நிலையில், இரண்டு வாரங்கள் கழித்து, டிசம்பர்14ல் சூரிய கிரகணம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.