இந்தியாவில் இருந்து தான் முதலில் கொரோனா பரவியது… சீனா முன்வைத்த அபாண்ட குற்றச்சாட்டு!!
“மோசமான சுகாதார அமைப்பு காரணமாக இந்தியாவில் இருந்து தான் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது” என சீன விஞ்ஞானிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. ஓராண்டு கடந்தும் இன்னும் பாதிப்பு குறைந்தபாடில்லை. சீனா ஆரம்பத்திலேயே கொரோனா வைரஸ் தொற்று பற்றிய உண்மையை மறைத்துவிட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டின.
உலகம் முழுவதும் 6 கோடியே 26 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 14 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதுவரை சீனா கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்த தகவலை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் முதலில் உருவானது என சீனா இப்போது தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது. இதுகுறித்து சீன அகாடமி ஆஃப் சைன்ஸ் அமைப்பை சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உருவாகி இருக்கலாம். இந்த வைரஸ் சாக்கடை நீரின் மூலம் விலங்குகளுக்கும், அதன் மூலம் மனிதர்களுக்கும் பரவி இருக்கலாம். சீனாவின் வுஹான் நகரில் இருந்து தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதில் எந்த உண்மையும் இல்லை.
இந்தியாவில் கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போது விலங்குகளுக்கு இடையே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு சண்டையை உருவாக்கும். இதனால் மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையேயான தொடர்பு அபாயத்தை அதிகரிக்கும். வெப்பமான காற்றின் மூலம் கரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்.
ஆனால் மக்கள் தொகை அதிகமாக இருந்ததால் வைரஸ் கண்டுபிடிக்கப்படாமலேயே போய்விட்டது. வுஹான் நகரில் அறியப்பட்டது உண்மையான கொரோனா வைரஸ் அல்ல. வங்கதேசம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, ரஷ்யா, செர்பியா போன்ற நாடுகளில் தான் கொரோனா வைரஸ் தோன்றியதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பலவீனமான பிறழ்வு மாதிரிகள் தென்பட்டுள்ளதால், அங்கு முதலில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சீனாவின் இந்த தகவலை இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. சீனா திட்டமிட்டே தன் மீதான பழியை இந்தியா மீது சுமத்த நினைப்பதாகவும் தெரிவித்துள்ளது.