“புறக்கணிப்புக்கு ஆளாகும் கொரோனா நோயாளிகள்” ; சுப்ரீம் கோர்ட் வருத்தம்

வீட்டுக் கதவில் நோட்டீஸ் ஒட்டுவதால் கொரோனா நோயாளிகள் புறக்கணிப்புக்கு ஆளாகின்றனர் என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். “கொரோனா தொற்றால் பாதிப்படையும் நபர்களின் குடியிருப்பு விவரம், அவர்களின் பெயர் உள்ளிட்ட தனி நபர் விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்படுவது சம்பந்தப்பட்ட நபருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது.
மேலும் இந்த பகிரங்க செய்கையால் கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கூடுதல் மனஅழுத்தம் ஏற்படுகிறது, பொதுவெளியில் அவர் கண்ணியத்துடன் வாழும் நெறிமுறைகளுக்கு எதிராக அமைகிறது.
எனவே ஒருவரின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையில், இது போன்று சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு ஏதுவாக மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பிறப்பித்துள்ள ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனு கடந்த முறை முன் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “கொரோனா தொற்றால் பாதிப்படையும் நபர்களின் குடியிருப்பு விவரம், அவர்களின் பெயர் உள்ளிட்ட தனி நபர் விவரங்கள் அடங்கிய சுவரொட்டி ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற சுவரெட்டிகளை ஒட்டுவதால் பாதிப்பு ஏற்பட்டால், அது தவிர்க்கப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு உள்ள வீடுகளில் கவனக்குறைவாக நுழைவதை தடுக்க சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.” என்றார்.
இதற்கு நீதிபதிகள், “யாதர்த்தம் என்னவோ வேறு மாதிரியாக உள்ளது. வீட்டுக் கதவில் நோட்டீஸ் ஒட்டுவதால் கொரோனா நோயாளிகள் புறக்கணிப்புக்கு ஆளாகின்றனர்” என தெரிவித்தனர்.
மேலும், மத்திய அரசு பதில் மனு மீதான விளக்க மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.