“ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை”- சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வேதாந்த ஆலை நிர்வாகத்தின் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆலையை திறக்க அனுமதி மறுத்ததோடு, தமிழக அரசின் அரசாணை செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமண், நவீன் சின்கா மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆலை நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதத்தில்,”ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக பராமரிப்பு பணிக்காக திறக்க அனுமதிக்க வேண்டும். இல்லையேல் ஆலையை இடைக்கால சோதனை செய்து காட்ட ஒரு மாதமாவது திறக்க அனுமதி வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசின் வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.