எனக்கு இது வேண்டாம்!! பத்ம விபூஷண் விருதை திருப்பியளித்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங்க் பாதல்..

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனக்களித்த பத்ம விபூஷண் விருதை பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங்க் பாதல் திருப்பியளித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 8ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இருப்பினும், விவசாயிகளின் போராட்டத்துக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனக்களித்த பத்ம விபூஷண் விருதை பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங்க் பாதல் திருப்பியளித்துள்ளார். இவர் பஞ்சாப் மாநில முதல்வராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ.க. உடனான கூட்டணியை சிரோமணி அகாலிதளம் கட்சி முறித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.