நாளை மாநிலம் தழுவிய பந்த் : எவையெல்லாம் இயங்கும்?

கர்நாடகாவில், ‘மராட்டிய மேம்பாட்டு ஆணையம்’ அமைப்பதை கண்டித்து, கன்னட அமைப்பினர் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த பந்த்துக்கு ஆட்டோ ஓட்டுநர்கள், மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க நாளை குப்பைகள் அள்ளப்படாது. ஆனால் பெட்ரோல் பங்க்குகள், ஹோட்டல்கள் திறந்து இருக்கும். வங்கி, அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் திறந்து இருக்கும். கார்மெண்ட்ஸ், ஐடி கம்பெனிகள் திறந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்பதால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பந்த் காரணமாக பெங்களூரில் இன்று நள்ளிரவு முதல் தீவிர பாதுகாப்பு அமல்படுத்தப்படும் என்று நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்துள்ளார். பஸ் நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் கூடுதலாக போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்படுவார்கள் என்று பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்துள்ளார்.
பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை இயங்காது என்று தெரிகிறது. இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பொதுமக்களுக்கு இடையூறு தரும் விதமாக பந்த் போராட்டங்களில் யாரும் ஈடுபட வேண்டாம், சமுதாயத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வேன் என்று நான் உங்களுக்கு உறுதி வழங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் கன்னட அமைப்பினர் பந்த் நடத்தும் முடிவில் உறுதியாக இருக்கின்றனர்.