செல்போன் சிக்னலுக்காக மர உச்சியில் கொட்டகை! மாணவர்களின் ஆர்வத்திற்கு குவிந்த பாராட்டுக்கள்

நெல்லை அருகே செல்போன் சிக்னல் பெற மர உச்சியில் கொட்டகை அமைத்து படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
படிப்பதற்கு ஆர்வம் கொண்ட குழந்தைகளுக்கு எதுவும் தடையாக இருக்காது. அந்த வகையில் தற்போது நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் ஆன்லைன் மூலமாக படிப்பதற்கு போதிய சிக்னல் வசதி இல்லாததால் வித்தியாசமாக ஒரு முயற்சியை செய்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
வி.கே.புரம் அருகே உள்ள காரையாறு வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு செல்போன் சிக்னல் கிடைக்காததால் அங்குள்ள மைலார் காணிக்குடியிருப்பு பழங்குடியின மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாமல் திணறி வந்தனர்.
வனப்பகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சிக்னல் கிடைக்கிறதா என்ற பார்த்த மாணவர்கள் சொங்கமொட்டை என்ற மலை பகுதயில் உள்ள மர உச்சிக்கு சென்றபோது செல்போனிற்கு சிக்னல் கிடைத்துள்ளது. உடனே அங்குள்ள மரத்தின் உச்சியில் கொட்டகை ஒன்றை அமைத்து தற்போது 10, 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் 7 பேர் தற்போது ஆன்லைனில் பயின்று வருகின்றனர்.
தடைகளை தகர்த்து எறிந்து ஆபத்தையும் பொருட்படுத்தாமல் வனப்பகுதியில் மரத்தின் உச்சியில் அமர்ந்து படிக்கும் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.