“ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உண்டு” – விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா…

டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர், ‛ஜனநாயக ரீதியில் அமைதியாகப் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உண்டு’ எனக் கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள், விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 4 சுற்றுப் பேச்சுகளிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படாததால், 5வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடிக்கிறது. இதற்கிடையே விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு, ‛உள்நாட்டு விவகாரத்தில் கருத்துக்கள் தேவையற்றது,’ என மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் ஐ.நா., சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானே டுஜாரிக் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஸ்டீபானே கூறுகையில், ‛ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. அதிகாரிகள் அதற்கு அவசியம் அனுமதியளிக்க வேண்டும்,’ எனக் கூறினார்.