“உலகில் யாருடைய அநீதிக்கும் நான் தலை வணங்கமாட்டேன்!” காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ட்வீட்!

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 152 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை, 4 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. தொடர்ந்து டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அவருடைய சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் நேற்று சென்றனர்.
டெல்லியில் உள்ள தங்களின் வீட்டில் இருந்து காரில் சென்ற அவர்களை, கிரேட்டர் நொய்டா நெடுஞ்சாலையில், பாரி சவுக் என்ற இடத்தில் உத்தர பிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர். ‘144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், வாகனங்களில் கூட்டமாக செல்ல அனுமதிக்க முடியாது,’ என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய ராகுலும், பிரியங்காவும் 150 கிமீ தூரத்தில் உள்ள ஹத்ராஸை நோக்கி விறுவிறுவென நடக்க தொடங்கினர். தொடர்ந்து, ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர். அவருடன் சென்ற பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன். யாருடைய அநீதிக்கும் நான் தலைவணங்கமாட்டேன். பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.