கொரோனாவா? அப்படீன்னா? அசத்தும் லட்சத்தீவு..

லட்சத்தீவுகளில், பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதால், அங்கு இதுவரை ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத நிலை தொடர்கிறது.
அரபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள, மிகச் சிறிய யூனியன் பிரதேசமான, லட்சத்தீவுகளில், எந்தவித கட்டுப்பாடுளும் இன்றி, இயல்பு வாழ்க்கை தொடர்கிறது.முக கவசங்கள், கிருமி நாசினிகள் இல்லை. உணவகங்கள், சுற்றுலா தலங்கள், பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல இயங்குகின்றன. திருமணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களில் பங்கேற்கும் விருந்தினர் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் கிடையாது.
இங்கு ஒருவர் கூட, கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்படவில்லை. இதற்கு, யூனியன் பிரதேச நிர்வாகம் கடைப்பிடிக்கும், கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம் என, கூறப்படுகிறது. இது குறித்து, லட்சத்தீவுகள் லோக்சபா எம்.பி.,யும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான, முகமது பைசல் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குறித்த தகவல், கடந்த ஜனவரியில் வெளியான உடனேயே, கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் லட்சத்தீவுகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
அதன் பிறகு, பொது மக்கள் முதல், அரசு அதிகாரிகள் வரை யாராக இருந்தாலும், லட்சத்தீவுகளுக்குள் வர வேண்டுமானால், கேரளாவின் கொச்சியில் உள்ள அரசு மருத்துவ மனையில், தங்களை ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர், கப்பல் அல்லது ஹெலிகாப்டர் வாயிலாக, தலைநகர் கவரட்டிக்கு அழைத்து வரப்படுவர்.அங்கு, மீண்டும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப் படுவர். அதன் பின், மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்பே, ஊருக்குள் அனுமதிக்கப்படுவர்.நான் இதுவரை, மூன்று முறை டில்லி சென்று வந்தேன். ஒவ்வொரு முறையும், இந்த நடைமுறைகளை பின்பற்றியே சென்று வந்துள்ளேன். இவ்வளவு கடுமையான முன்னெச்சரிக்கை நடைமுறைகள் இருப்பதால் தான், இங்கு ஒருவருக்கு கூட இதுவரை தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.