வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்… 9 பெண்கள் மீட்பு.. 19 பேர் கைது!

தஞ்சையில், வீடுகளை வாடகைக்கு எடுத்து, ‘மசாஜ் சென்டர்’ பெயரில் விபச்சாரம் நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 9 பெண்களை மீட்ட போலீசார், 19 பேரை கைது செய்தனர்.
தஞ்சையில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, மசாஜ் சென்டர் என்ற பெயரில், விபச்சாரம் நடப்பதாக, போலீசாருக்கு புகார்கள் வந்தன. எஸ்.பி., தேஷ்முக்சேகர் சஞ்சய் உத்தரவுப்படி, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் நடத்திய விசாரணையில் தஞ்சை தமிழ் பல்கலை காவல் நிலையத்துக்குட்பட்ட காவேரி நகர், மூவேந்தர் நகர் மற்றும் தஞ்சை நகர பகுதிகளில், தனி வீடுகள், பங்களாக்களை வாடகைக்கு எடுத்து, ஸ்பா, மசாஜ் சென்டர் என்ற பெயரில், இளம்பெண்களை வைத்து, விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
ஆந்திரா, சென்னை, கோவை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, தரகர்கள் மூலம் பெண்களை அழைத்து வந்துள்ளனர்.விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒன்பது பெண்கள் மீட்கப்பட்டனர். இவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ராஜேஷ், (45) எனும் வக்கீல் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், பைக்குகள், 32 ஆயிரம் ரூபாய், 31 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.