மனிதத்திற்கு மதம் தடையில்லை.. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்ட அத்தருணம்!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று அரசுடன் நடந்த 6 ஆம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. போராட்டத்தின் தீவிரமடைந்து வரும் அதே சூழ்நிலையில், களத்தில் அழகான சில காட்சிகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. அது அங்கு நிலவும் சகோதரத்துவம். போராட்டக்களத்தில் உணவு வழங்கி கொண்டிருப்பவர்கள் கேரள இஸ்லாமிய கலாச்சார குழுவை சேர்ந்தவர்கள்.
விவசாயிகளுக்கு டெல்லியில் ஓக்லா என்ற இடத்திலுள்ள கிளை அலுவலகத்தில் உணவு சமைத்து அதை வாகனத்தில் கொண்டு வருகிறார்கள். இதற்காக தினமும் 80 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் மேற்கொள்கின்றனர். எந்த பாகுபாடும் இல்லாமல் இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து மதத்தைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த உணவை உண்கின்றனர்.
இது குறித்து கேரள இஸ்லாமிய கலாச்சார குழு மொகமத் சஜாத் கூறும் போது “ கடந்த ஆறு நாட்களாக விவசாயிகளுக்கு உணவு வழங்கி வருகிறோம். இது வெறும் விவாசாயிகளின் போராட்டமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவின் போராட்டம். இந்து, இஸ்லாமியர், சீக்கியர்களுக்குள் எந்தப்பிரச்னையும் இல்லை, அனைவரது ஒட்டு மொத்த பிரச்னையும் அரசுடன் தான்” என்றார்.
சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவில் இருந்தும் உணவு சமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. குருத்வாராவில் சமைக்கப்பட்ட உணவு சீக்கியர்களுக்கு மட்டும்தான் என யாரும் சொல்வதில்லை, இதை சாப்பிட மாட்டோம் என்று இந்துவோ, இஸ்லாமியரோ மறுப்பதும் இல்லை.
போராட்டம் குறித்து வழக்கறிஞர் மன்ஜித் சிங் கூறும் போது “ அரசியல் கட்சிகள் நம்மை பிரித்து, அதன் மூலம் ஆட்சி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் . இங்கு இந்து இஸ்லாமியர் சீக்கியர் என்ற வேறுபாடு ஏதும் கிடையாது. எல்லோரும் ஒரே குடும்பம் போன்றவர்கள்.” என்றார்.