அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் போகும் கரோனா.. ஒரே நாளில் 3,000க்கும் அதிகமானோர் பலி..
அமெரிக்காவில் ஒரே நாளில் 3,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “நாட்டில் பலி சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரே நாளில் கரோனாவுக்கு 3,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கு முன்னர் மே மாதம் கரோனாவுக்கு 2,769 பேர் பலியாகினர். அதன் பிறகு தற்போதுதான் அதிகபட்ச உயிர் பலி ஏற்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 10 லட்சம் பேருக்குக் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபநாட்களாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்துக்குப் பிறகு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்காவில் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் வைரஸ் 2-வது கட்ட அலை பரவியது போன்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் அதிகரித்துவரும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் முகக்கவசத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.