ஹாத்ரஸ் பெண்ணின் குடும்பத்தினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நாளை விளக்கம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

உத்தரப் பிரதேசம், ஹாத்ரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நாளை நீதிமன்றத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டுள்ளன.
ஹாத்ரஸ் சம்பவத்தில் தாமாக முன்வந்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநிலத் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர், கூடுதல் ஏடிஜிபி ஆகியோர் வரும் 12-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஹாத்ரஸ் சம்பவம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் இருவரும் ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அறிக்கைகளையும் கொண்டுவந்து வழக்குத் தொடர்பாக நேரில் விளக்கமும், எடுக்கப்பட்ட நடவடிக்கை விளக்க வேண்டும்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நடந்த சம்பவங்களைக் கூற வேண்டும். அந்தக் குடும்பத்தினர் நீதிமன்றத்துக்கு வந்து செல்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலுமாக மீறப்பட்டுள்ளதா என்பதையும், இந்த உரிமைகளை மீறுவதற்காக மாநில அதிகாரிகள் அடக்குமுறையாகவும், உயர் தலைவர்களாகவும், சட்டவிரோதமாகவும் செயல்பட்டார்களா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதன்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைக் கடும் பாதுகாப்புகளுடன் நாளை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து ஹாத்ரஸ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால் கூறுகையில், “ மாவட்ட நீதிபதி இந்த வழக்கில் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில்தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தற்போது அந்தக் குடும்பத்தினர் ஹாத்ரஸில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்
என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, எவ்வாறு அழைத்து வரப்போகிறார்கள் எனும் விவரங்களை போலீஸார் கூற மறுத்துவி்ட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச் சுற்றி 60 போலீஸார், 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து அந்த வீடு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு யாரெல்லாம் செல்கிறார்கள், வெளியே போகிறார்கள், என்பது குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.