டி.ஆர்.பி. முறைகேடு வழக்கு.. ரிபப்ளிக் டிவி தலைமை செயல் அதிகாரி விகாஸ் அதிரடி கைது!!

இந்தியாவில் டி.ஆர்.பி. (டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் – TRP) கணக்கிடும் பணியை BARC (Broadcast Audience Research Council) என்ற நிறுவனம் செய்துவருகிறது. இந்த நிறுவனத்துக்குக் கீழ் இயங்கி வரும் ஹன்சா ரிசர்ச் நிறுவனம், BARC நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா முழுவதும் 30,000 டி.ஆர்.பி மீட்டர்களை வைத்து டி.ஆர்.பி கணக்கிடும் பணியைச் செய்துவருகிறது.
சமீபத்தில், டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளைப் பெறுவதற்காக தங்கள் சேனலை மட்டும் பார்க்க ஒரு வீட்டுக்கு மாதந்தோறும் ரூபாய் 400 முதல் 700 வரை அளித்து மோசடி செய்திருப்பதாக ஆங்கில செய்தி ஊடகமான ரிபப்ளிக் டி.வி, மராத்தி சேனல்களான `Fakt Marathi’, `பாக்ஸ் சினிமா’ உள்ளிட்ட சேனல்கள் மீது ஹன்சா ரிசர்ச் (Hansa Research) நிறுவன அதிகாரி நிதின் தியோகர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து மும்பை காவல்துறை, கடந்த அக்டோபர் 6-ம் தேதி டி.ஆர்.பி மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதில், தடயவியல் தணிக்கையாளர்கள், BARC கவுன்சில் உறுப்பினர்கள் உட்பட 140 நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், டி.ஆர்.பி. முறைகேட்டில் ரிபப்ளிக் டிவி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கான்சன்தானியை (Vikas Khanchandani) மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விகாஸ் 13-வது நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழியர்களுக்குப் பாதுகாப்பு கோரி ரிபப்ளிக் ஊடக குழுமத்தின் ஏ.ஆர்.ஜி அவுட்லியர் மீடியா பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. அந்த மனு நிராகரிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் ரிபப்ளிக் டி.வி உயரதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட்,“இந்த மனு குறிப்பிட்ட நோக்கத்துக்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா போலீஸார், உங்கள் நிறுவன ஊழியர் யாரையும் கைது செய்யக்கூடாது, வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக்கூடாது என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இந்த மனுவை நீங்கள் திரும்பப் பெறுவது நல்லது” என்று கருத்துத் தெரிவித்திருந்தார். ரிபப்ளிக் டி.வி தரப்பில் அர்னாப் கோஸ்வாமி, அவர்களது ஊழியர்களை கைது செய்தது தவறு என்று வாதிடப்பட்டது.
முன்னதாக மும்பை காவல்துறை தாக்கல் செய்த 1,400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில் டி.வி சேனலின் விநியோகப் பிரிவுத் தலைவர் கன்ஷ்யம் சிங் பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் இந்த வழக்கில் அப்ரூவர்களாக மாறுவார்கள் என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.