“பிரபாகரனை நாய் போல இழுத்து வந்தேன்”: இலங்கை அதிபர் ஆவேசம்

பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து கதையை முடித்து வைத்ததாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவேசமாக தெரிவித்தார்.
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின்போது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய. அந்தப் போரில் விடுதலைப் புலிகளை அழித்து நாட்டில் அமைதியை நிலைநாட்டியவர் என்று இலங்கை மக்களால் பாராட்டப்பட்டவர். அந்தப் போரின்போது சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் கடுமையான அணுகுமுறையைக் கையாண்டதே அந்த வெற்றிக்கு பின்னணியாக கருதப்படுகிறது. இலங்கை அதிபர்தேர்தலில் அபார வெற்றி பெற்று தற்போது அவர் அதிபராக பதவி வருகிறார்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை அம்பாறை, உஹன பிரதேசத்திலுள்ள லாத்துகல கிராமத்தில் நடந்த “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும்போது கோட்டாபய ராஜபக்ச கூறியதாவது:-
“எனக்குள் இரண்டு முகங்கள் உள்ளன. நான் ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு இருந்த பாதுகாப்பு செயலாளரின் முகத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். பித்தளை சந்தியில் பிரபாகரன் எனக்கு குண்டு வைத்தான். பின்னர் என்னால், அவன் ஒரு நாய் போல் கொல்லப்பட்டான். நந்திக்கடலில் நாய் போல் அவனை இழுத்து வந்தேன். நான் எதற்கும் தயாரானவன், மக்களுக்கு சேவை செய்வதே எனது தேவையாக உள்ளது. நான் அதிகாரத்துக்கு வந்த பின்னர் – அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. என்னை யாராவது மீண்டும் சீண்டிப் பார்க்க விரும்பினால் எனது பழைய முகத்தை காட்டவும் தயார். நந்தசேன கோத்தாபய ராஜபக்சேவாகவோ அல்லது கோத்தாபய ராஜபக்சேவாகவோ என எந்த ஆளுமையாகவும் செயற்பட தயார்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.