பழைய தொலைக்காட்சிப் பெட்டியை வீடாக மாற்றும் இளைஞர்!!

தொலைக்காட்சிப் பெட்டி என்ற வார்த்தையையே மறக்கச் செய்யும் வகையில் தற்போதைய நவீன தொலைக்காட்சிகள் மெலிந்து விட்டன.
கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி தற்போது புகைப்பட சட்டங்கள் போல சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளின் ஆயுளும் அதன் உருவத்தைப் போலவே உள்ளது வேறு கதை.
சரி.. வீட்டிலிருந்த பழைய தொலைக்காட்சிப் பெட்டிகளை என்னதான் செய்வது? வேறென்ன எடைக்குப் போட வேண்டியதுதான் என்கிறீர்களா?
இதற்கு ஒரு நல்ல பதிலை வைத்திருக்கிறார் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த விலங்குகள் மீது அன்பு காட்டும் அஜிபித் தௌவ்ரா.
பழைய தொலைக்காட்சிப் பெட்டிகளை புதுப்பித்து, குளிரில் நடுங்கும் தெரு நாய்களுக்கு வீடுகளை கட்டமைத்து வருகிறார் இந்த இளைஞர். தெரு நாய்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் உதித்ததே இந்த யோசனை என்கிறார் அபிஜித்.
பழைய பொருள்களை, பயனுள்ளதாக மாற்றும் இளைஞராக அப்பகுதி மக்களுக்கு ஏற்கனவே பரீட்சயமான அபிஜித்தின் இந்த யோசனை, அவரை பலரும் அறிந்தவராக மாற்றியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பழைய பொருள்களிலிருந்து சுமார் 50 விதமான பயனுள்ள பொருள்களை உருவாக்கியிருக்கிறார். தற்போதெல்லாம் பழைய பொருள்களை எங்கள் ஊர் மக்கள் தூக்கி எறிவதே இல்லை. அனைத்தையும் என்னிடம் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். தற்போது எனது அறையில் 7 பழைய தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன. அவற்றை, தெரு நாய்களுக்கான வீடாக மாற்றும் பணியை செய்து வருகிறேன் என்கிறார் அபிஜித்.