லாரி மோதி கேரள பத்திரிக்கையாளர் உயிரிழந்த விவகாரத்தில் ஓட்டுநர் கைது

திருவனந்தபுரம் பள்ளிசல் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (45). இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், நிருபராகவும் இருந்துவந்தார். மேலும் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றும் நடத்தி வந்தார்.
இவர் கேரள தங்கம் கடத்தல் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சோப்னா குறித்து பல்வேறு செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி 3. 15 மணிக்கு அலுவலகத்தில் இருந்து அவரது வீட்டுக்கு செல்லும்போது வேகமாக வந்த லாரி அவரை இடித்து தள்ளிவிட்டு சென்றது. இதில் அவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் எதிர் கட்சியினரிடையே பெரும் புயலை கிளப்பியது .இந்நிலையில் ஈஞ்சக்கல் பகுதியைச் சேர்ந்த ஜோய் (50 )என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பந்தமாக கேரளா பத்திரிகையாளர்கள் சங்கம் ஐஜி தலைமையிலான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஐஜி தலைமையிலான விசாரணை நடத்த டிஜிபி லோகநாத் பெக்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதீப்பின் உடல் திருவனந்தபுரம் பிரஸ் கிளப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, நடிகர் சுரேஷ்கோபி எம்.பி, எம்எல்ஏக்கள் வின்சென்ட், சதீஷ் ,முன்னாள் சபாநாயகர் சக்தன், சசிதரன் உட்பட ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.