“நாங்கள் அந்த கொலையை கட்சிதமாக முடித்திருப்போம்” – ரஷிய அதிபர் புதின்
![](https://thambattam.com/storage/2020/12/202008202227231692_Tamil_News_Alexei-Navalny-Poisoned-Russian-opposition-leader-in-a-coma_MEDVPF-1.jpg)
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இந்நிலையில், நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளாகியுள்ளதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து ஜெர்மனியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், தன் மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் ரஷிய அதிபர் புதினையே குற்றம் சுமத்தின. இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் இடம்பெற்றிருந்தன.
அப்போது புதினிடம் எதிர்க்கட்சி தலைவர் நவல்னியை கொலை செய்யும் நோக்கத்தோடு விஷத்தன்மை உடைய வேதிப்பொருள் கொடுக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த புதின்,
“அவர் (நவல்னி) அமெரிக்க உளவு அமைப்புடன் தொடர்பில் உள்ளார். ரஷிய அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆனால், இதற்காகவெல்லாம் நாங்கள் அவருக்கு விஷம் கொடுக்க வேண்டியதில்லை. அவரால் யாருக்கு என்ன பயன்?
ஒருவேளை எங்களுக்கு அது தேவைப்பட்டிருந்தால் (நவல்னியை கொலை செய்ய தேவைப்பட்டிருந்தால்) நாங்கள் அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம்” என்றார்.