ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு : வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கேரளாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும் என்று அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கேரளாவில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில அமைச்சர்கள் கே.கே.ஷைலாஜா, உயர்கல்வி செயலாளர் உஷா டைட்டஸ், சுகாதார செயலாளர் ராஜன் கோப்ராகடே உள்ளிட்டவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினருக்கும் சில நிபந்தனைகளுடன் வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கேரளாவில் 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்தாண்டு மார்ச் 17ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் என்றும், கல்லூரிகளில் இளநிலை படிப்பு களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும், உயர்மட்டக் கூட்டத்தில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் முதுகலை மாணவர்களுக்கான வகுப்புகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், பள்ளிகளில் நடக்க உள்ள இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவர்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். என்றும் முடிவெடிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் பள்ளி திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் நிலையில், தமிழகத்தில் பள்ளி திறப்பது பற்றி டிசம்பர் கடைசி வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.