நிலவிலிருந்து 1,731 கிராம் பாறை மற்றும் கற்களை பூமிக்கு அனுப்பிய சீன விண்கலம்..
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சீனா அனுப்பிய சாங்கி-5 விண்கலம், அங்கிருந்து 1,731 கிராம் பாறை மற்றும் கற்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிலவிலிருந்து பாறைகள், கற்களை சேகரித்துள்ள சாங்கி விண்கலம், அதனை வெற்றிகரமாக பூமிக்கு அனுப்பியுள்ளது.
1,731 கிராம் எடை கொண்ட அந்தப் பொருள்கள் ஆய்வுக் குழுவிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கற்களை சேகரிப்பது, ஆய்வு செய்வது ஆக்ய பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வாா்கள் என்று ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலவிலிருந்து கற்கள், பாறைகளை பூமிக்குக் கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கான சீனாவின் சாங்கி-5 விண்கலம், கடந்த மாதம் 24-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது.
அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இத்தகைய திட்டத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா நிறைவேற்றி வருகிறது.
கடந்த 1-ஆம் தேதி நிலவில் சாங்கி-5 ஆய்வுக்கலம் பத்திரமாகத் தரையிறங்கியது. அங்கு கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்த அந்த ஆய்வுக் கலம், அவற்றை கடந்த புதன்கிழமை வெற்றிகரமாக பூமிக்கு அனுப்பியது.