அரசு விரைவு பேருந்தில் பயணிப்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது!

வரும் 7 ம் தேதி முதல் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் சேவை தொடங்குவதையொட்டி பேருந்துகளில் பயணம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது.
கொரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த அரசு விரைவு பேருந்துகள் வரும் 7 ம் தேதி முதல் இயக்கலாம் என அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி வரும் 6ம் தேதி நள்ளிரவு முதல் வெளியூர் செல்வதற்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.
இந்நிலையில், அரசு விரைவு பேருந்தில் பயணிப்பதற்கான ஆன்லைன் முன்பதிவானது இன்று தொடங்கியது. வெளியூர் செல்லும் பயணிக www.tnstc.in என்ற இணையதளத்திலும், tnstc என்ற மொபைல் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முதல் கட்டமாக 400 அரசு விரைவு பேருந்துகள், சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், சேலம், ஈரோடு, நாகர்கோவில் உள்பட முக்கிய ஊர்களுக்கு இடையே இயக்கப்படவிருக்கிறது. அரசு விரைவு பேருந்தில் மொத்தம் 43 இருக்கைகள் உண்டு. அதில் 26 முதல் 32 பயணிகள் வரை மட்டுமே பயணிக்க அனுமதிப்படும் என்றும், ஏசி விரைவு பேருந்துகள் தற்போதைய நிலையில் இயக்கப்படாது எனவும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.