நவ., 29-க்குள் தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் – இந்திய தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதி மற்றும் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், பீகார் மாநில பொதுத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகார் சட்டமன்றத் தேர்தலை சரியான நேரத்தில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் முக்கிய அக்கறையாக வாக்காளர்களின் ஆரோக்கியத்தினை பாதுகாப்பது மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் காலக்கெடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதாக உள்ளது என கூறியுள்ளது.
பீகார் பொதுத் தேர்தலை நவ., 29-க்கு முன்பாக நடத்தி முடிக்க வேண்டும். பிற மாநிலங்களில் காலியாக உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதி மற்றும் 65 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அதே நேரத்தில் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. பீகார் பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான தேதிகள் குறித்த நேரத்தில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி அவற்றிற்கும் நவ., 29-க்கு முன்பாக தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.