டெல்லி – காசியாபாத் சாலையின் இருபுறத்திலும் விவசாயிகள் மறியல்

டெல்லி அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறத்தையும் முடக்கியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து 27 வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியை இணைக்கும் எல்லைப்பகுதியான காசியாபாத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு புறத்தை மட்டுமே மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இப்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ள விவசாயிகள், சாலையின் இரு புறத்தையும் முடக்கியுள்ளனர். இதனால் டெல்லியிலிருந்து உத்தரபிரதேசத்தின் காசியாபாத் வழியாகப் பிற மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.